ஐயங்கேணி தமிழ் மகா வித்தியாலயம்

வரலாறு

தரம் 01 மாணவர்கள் வருகை

hs7.png
hs7.png

 

பாடசாலையின் தோற்றம் மற்றும் வளர்ச்சி

மீன்பாடும்  தேன்நாடாகிய  மட்டக்களப்பிலிருந்து  வடக்கே சுமார் பதினெட்டு கிலோமீற்றர் தொலைவில் அமைந்துள்ளதுதான் மட்/ஐயன்கேணி தமிழ் மகா வித்தியாலயம் ஆகும். மட்டக்களப்பு கல்வி வலயத்தில் ஏறாவூர்பற்று கோட்டக் கல்விப் பிரதேசத்தில் செங்கலடி நகரத்திலிருந்து 3 கி.மீ. தொலைவில் ஐயன்கேணி  எனும் கிராமத்தில் எமது பாடசாலை அமைந்துள்ளது. இயற்கை வளம் நிறைந்த ஐயன்கேணியிலிருக்கும் இப் பாடசாலையின் எல்லைகளாக வடக்கே புன்னைக்குடா கடலும் தெற்கே கூட்டுறவூக் கடை, ஏறாவூர் புகையிரத நிலையைச்சந்தியும், கிழக்கே ஏறாவூர் நகரமும், மேற்கே கிராமவாசிகள் செறிந்து வாழுகின்ற குடியிருப்பு மனைகளையும் ​கொண்டுள்ளது. இக் கிராமத்தவரின் பிரதான தொழில்களாக விவசாயம், கட்டிட நிர்மாணம் தொடர்பான தினவேதனப் பணியாளர்களாகவும், மீன்பிடியாளர்களாகவவும் விளங்குவதையும் காணமுடிகின்றது. இப் பாடசாலையின் வரலாற்றை நோக்கும்போது இற்றைக்கு சுமார் ஐந்து தசாப்த காலங்களுக்கு முன்னர் அதாவது, 1961.05.04 இல் தற்காலிகமான ஓலைக் குடிசையொன்றில் திரு.சி.இளையதம்பி என்பவரால் ஸ்தாபிக்கப்பட்டதாக அறியமுடிகின்றது.

மட்/ஐயன்கேணி அரசினர் தமிழ் கலவன் பாடசாலை என்ற பெயருடன் ஆண், பெண் மாணவர்கள் தலா 15 பேருடன் ஆரம்பப் பாடசாலையாக ஆரம்பிக்கப்பட்டது. இப் பாடசாலை ஆரம்பிக்கப்பட்டபோது திரு.சு.வேதாரணியம் என்பவர் அதிபராக் கடமையாற்றியுள்ளார். பாடசாலை ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து முன்னேற்றம் கண்ட இந்த வித்தியாலயத்தின் பெயரானது 01.01.2004 இலிருந்து மட்/ஐயன்கேணி தமிழ் வித்தியாலயம் எனப் பெயர் மாற்றப்பட்டு இயங்கி வருகின்றது. ஆரம்பப் பாடசாலையாக இயங்கி வந்த இப் பாடசாலையில் 1994 ஜனவரியிலிருந்து தரம் 6 தொடக்கம் 9 வரையான வகுப்புக்களை ஆரம்பிப்பதற்கு அனுமதி கிடைக்கப் பெற்றது. தரம் 10, தரம் 11 போன்ற வகுப்புக்களைத் தொடங்குவதற்கும் 01.01.2007ம் ஆண்டில் அனுமதி கிடைக்கப் பெற்று அதிபர் திரு. மா . மனோகரன் அவர்களின் அயராத முயற்சியினால் 2018ல் உயர்தரம் ஆரம்பிக்கவும் அனுமதி கிடைக்கப்பெற்றது. 2020 ஆம் ஆண்டு கலைப்பிரிவில் முதல் தடவையாக உயர்தரப் பரீட்சைக்கு மாணவர்கள் உள்வாங்கப்பட்டு கல்வியியல் கல்லூரிக்கு தெரிவு செய்யப்பட்டது சிறப்பம்சமாகும். 

இதன் பிரகாரம், பாடசாலை வகை 2 லிருந்து வகை 1 பாடசாலையாக ஆக மாற்றம் மேற்கொள்ளப்பட்டமையானது பாடசாலையின் முன்னேற்றத்திற்கோர் மைல் கல்லாகும். தற்போது கலவன் பாடசாலையாக இயங்கி வருகின்றது. மற்றும் 2011 இல் பொன்விழா கண்ட எமது பாடசாலை 2023 இல் 426 மாணவர்களையும் 24 ஆசிரியர்களையும் பௌதீக வளங்களையும் தன்னகத்தே கொண்டு வளர்ச்சி அடைந்து வருகின்றது. மேலும் இப்பாடசாலையின் வளர்ச்சியில் எம்மோடு தோள் நிற்பவர்களாக பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்றுக் குழுவும், பழைய மாணவர் சங்கமும் கைகொடுக்கின்றது.